Payload Logo
தமிழ்நாடு

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

Author

bala

Date Published

Sekar Babu iphone

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்த அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்தது.

உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தினேஷ் புகாரும் அளித்திருந்தார். . இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது தன்னுடைய ஐபோனை கேட்டு மீண்டும் கோவிலுக்கு தினேஷ் வந்திருக்கிறார்.

போனை கேட்ட தினேஷிடம் கோயில் நிர்வாகம் கோயில் உண்டியலில் விழுந்த அனைத்து பொருட்களும் முருகனுக்கு சொந்தமானது என கூறியுள்ளனர்.இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த தினேஷ் சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் மனு அளித்தார்.அவர் கொடுத்த அந்த மனுவின் அடிப்படையில், அதற்கான விசாரணை சரியாக நடத்தப்பட்டு செல்போனை ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறி அவரை அனுப்பி வைத்தது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” இதற்கு விதிவிலக்கு உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்” எனவும் உறுதி கொடுத்திருந்தார்.

இந்த சூழலில், தற்போது உண்டியலில் விழுந்த ஐஃபோன் தரப்படும் என சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் " இந்த ஆட்சி கொடுக்கின்ற ஆட்சி எடுக்கின்ற ஆட்சி இல்லை. கடந்த காலங்களில் கிள்ளி கொடுக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அள்ளி கொடுக்கின்ற ஆட்சி. எனவே நிச்சயமாக திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிமையாளரிடம் இன்று ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார்.