Payload Logo
தமிழ்நாடு

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

Author

Bala

Date Published

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் அவரது பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை மத்திய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது. அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.


இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது.


மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும்.


இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு. மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது” என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அறிவுறித்தியுள்ளார்.