Payload Logo
விளையாட்டு

'மீண்டும் ஜீன்ஸுடன் களமிறங்கிய கார்ல்சன்'... வரலாற்றில் முதல் முறையாக 2 பேர் சாம்பியன்!

Author

gowtham

Date Published

Blitz Chess jeans

நியூயார்க்:அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய இருவரும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் (FIDE) சார்பில், உலக ரேபிட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நியூயார்க்கின் வோல் ஸ்ட்ரீட்டில் 26 முதல் 31 வரை நடைபெற்றது.

இதில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆடைக் குறியீட்டை மீறியதாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆம், ஜீன்ஸ் அணிந்து வந்ததால் ஆடை கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக 'ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது தவறு' என கூறி, அவருக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவரது ஆடையை மாற்றினால் மட்டுமே விளையாட அனுமதி கிடைக்கும் எனவும் ஃபிடே அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்கு இணங்க மறுத்ததால், அவர் உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியனது.

இதையடுத்து, மேக்னஸ் கார்ல்சன் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பின், ஜீன்ஸ் அணிந்து வரலாம் என ஆடைக்கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தியது.

இந்த நிலையில், கடைசி நாளான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கார்ல்சனும், இயன் நெபோம்னியாச்சியும் மோதினர். பரபரப்பான ஆட்டங்களில் முதல் இரண்டு சுற்றுகளில் கார்ல்சன் வெற்றி பெற, பின்னர் அடுத்தடுத்த இரண்டு சுற்றுகளில் இயன் வெற்றி பெற்றார். இதனால், 2-2 என புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதனையடுத்து, 7 ஆட்டங்களுக்குப் பிறகும் முடிவு எட்டப்படாததால், இதையடுத்து, கூட்டாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பகிர்ந்துகொள்ள இருவரும் ஒப்புக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நடுவர்கள், இருவரும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்களாக அறிவித்தனர். இதன் மூலம் பிளிட்ஸ் செஸ் வரலாற்றில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் வென்ற நிகழ்வு நடந்துள்ளது.