சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவை – அமைச்சர் சிவசங்கர் சொன்ன தகவல்!
Author
castro
Date Published
சென்னை : மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் (ஜூன் 27, 2025) தொடங்கி வைக்க உள்ளார். இந்த முயற்சி, சென்னையை மாசு இல்லாத, பசுமையான நகரமாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். மாநகர போக்குவரத்து கழகம் (MTC) மூலம் இயக்கப்படவுள்ள இந்த பேட்டரி பேருந்துகள், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக செயல்திறனுடன், பயணிகளுக்கு சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.
சென்னையில் முதற்கட்டமாக 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2023ஆம் ஆண்டு ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த பேருந்துகள், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 240 கிலோமீட்டர் வரை இயங்கக்கூடியவை மற்றும் 54 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.
அது மட்டுமின்றி, இவை உயர்நிலை பாதுகாப்பு அம்சங்களான தீ அபாய எச்சரிக்கை அமைப்பு, பின்புற கேமராக்கள் மற்றும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது ” சென்னை மாநகரம் மாசடையாமல் தடுக்க பேட்டரி பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது.
இன்னும் 10 நாட்களில் சென்னைக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சேவையை தொடங்கி வைப்பார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும், பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே, அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும், இந்த மின்சார பேருந்துகள், டீசல் பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருப்பதால், சென்னையின் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.