Payload Logo
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? வெளியான முக்கிய தகவல்!

Author

manikandan

Date Published

TVK Not participating in Erode By Election 2025

சென்னை :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது.

டெல்லி தேர்தல் நடைபெறும் அதே நாளான பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொத்தி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியானது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.  அதேபோல இங்கு போட்டியிட பிரதான அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ளதால் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி முக்கியமானதா பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் கட்சி ஆரம்பித்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது பேசுபொருளாக மாறி வரும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனக் கூறி 2024 நாடாளுமன்ற தேர்தலை கூட தவெக புறக்கணித்து இருந்தது.

இந்நிலையில், இன்னும் ஒரு வருட காலத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக, இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு 'இல்லை' என்ற பதில் தான் கிடைத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்றும் கட்சி தலைமை தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த முறை திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்பது பற்றியும் இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பாஜக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகின்றன. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னும் தெரியவரவில்லை.