அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மீது குண்டாஸ்!
Author
bala
Date Published

சென்னை :அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், உடனடியாக ஞானசேகரனை காவல்துறை கைது செய்தது.
ஏற்கனவே, ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன, அதில் கொள்ளை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற வழக்குகளும் உள்ளன. எனவே, இந்த விசாரணையில் கூடுதல் கவனம் எடுத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்தில், விசாரணையின் போது காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது.சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரையின் பேரில், சென்னை காவல்துறை கமிஷனர் அருண் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே, ஞானசேகரன் மீது கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் குறைந்தது ஒரு வருடம் வரை ஜாமீன் பெற முடியாது. ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாயும் நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.