Payload Logo
தமிழ்நாடு

நடைபயணத்திற்கு தடை - நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

Author

gowtham

Date Published

pmk - Anbumani

சென்னை :அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் நேற்றைய தினம் முதல் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1ம் தேதி அன்று தருமபுரியில் நிறைவடையும் வகையில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இந்த பயணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து, அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, டிஜிபி சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, அவர் திட்டமிட்டபடி திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கியிருந்தாலும், காவல்துறையின் அனுமதி மறுப்பு மற்றும் தடை உத்தரவு காரணமாக, இந்த விவகாரத்தில் சட்டரீதியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.

இந்த விவகாரம் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், அதன் முடிவு அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.