கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!
Author
Rohini
Date Published
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இந்த அகழாய்வு, தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை உலகறியச் செய்து, சங்க காலத்தின் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) வாழ்க்கை முறை, நகர நாகரிகம், எழுத்து, தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை (2014-2016) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார். இவர் இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, கீழடி அகழாய்வை உலகளவில் கவனம் ஈர்க்கும் வகையில் முன்னெடுத்தவர்.
டெல்லியில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக பணிபுரிந்து வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணன், டெல்லியில் உள்ள தேசிய தொல்பொருட்கள், நினைவுச் சின்னங்கள் தேசிய இயக்ககத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது நொய்டாவில் உள்ள தொல்பொருட்கள், நினைவுச் சின்னங்கள் இயக்ககத்தின் இயக்குனராக அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கீழடி தொடர்பாக அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது சர்ச்சையானது. கீழடி’யில் 2014 முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், அந்த ஆய்வறிக்கை 2023ல் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கைக்கு இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்தது. முன்னதாக, தமிழகத்தின் தொன்மையை மறைக்க பாஜக முயற்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்த இடமாற்றம் தொல்லியல் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.