Payload Logo
இந்தியா

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

Author

Rohini

Date Published

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில் பயணிக்கவேண்டுமா என்கிற அளவுக்கு யோசிக்க தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே, சமீபத்தில், அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி, 274 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. கோளாறு ஏற்பட்ட இந்த விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மாடலில் இயக்கப்பட்டது, மற்றும் இதில் 231 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர். நடுவானில் பறக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை தெரிந்தவுடன், விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.

அதனைத்தொடர்ந்து ஜூன் 16, 2025 அன்று, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் (விமான எண் AI-179) புதிய தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.இந்த விமானம் மும்பையில் தரையிறங்கியபோது, கோளாறு காரணமாக பயணிகள் அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம், ஏற்கனவே விபத்தால் அதிர்ச்சியில் உள்ள பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானம், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, கொல்கத்தாவில் இடைநிறுத்தம் செய்த பின்னர், மும்பைக்கு வந்தது. தரையிறங்கிய சில நிமிடங்களில், விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர்.