Payload Logo
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

Author

Rohini

Date Published

valparai

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60) உடல்நலக் குறைவு காரணமாக 2025 ஜூன் 21 அன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவையடுத்து, வால்பாறை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பின்படி, “திரு. டி.கே. அமுல் கந்தசாமி, வால்பாறை (தனி) தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், 2025 ஜூன் 21 அன்று மறைந்தார் என்ற செய்தியை மாண்புமிகு சபாநாயகர் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிந்தார்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “அவரது மறைவை அடுத்து, கோவை மாவட்டம், 124 வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் பதவி காலியாகியுள்ளது,” என 2025 ஜூன் 25 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் முதன்மைச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் மற்றும் சபாநாயகர் எம். அப்பாவு ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டு, சென்னையிலுள்ள அரசு அச்சகத்தில் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே, வால்பாறை இடைத்தேர்தல் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கோவை வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.