Payload Logo
தமிழ்நாடு

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

Author

Rohini

Date Published

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டம் 2018இல் முறையாக ஒப்புதல் பெற்று, 2019 ஜனவரி 27 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இது மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றது, இதில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த மருத்துவமனை ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் 870 படுக்கைகள் கொண்டதாக கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது உயர்தர மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும் முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. மேலும், மதுரை மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையாக இது இருந்தது. ஆனால் இன்று வரை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளில் எந்தவித முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முப்பரிமாண மாதிரிப் படத்தை வெளியிட்டது. முதல் கட்டப் பணி 2026லும், 2ஆம் கட்டப் பணி 2027-லும் முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான (3D) மாதிரி காணொளியை வெளியிட்டது.

இந்த வீடியோ, மருத்துவமனையின் எதிர்கால தோற்றத்தைப் பிரமிக்க வைக்கும் வகையில் காட்டியது, இதில் மருத்துவக் கல்லூரி, அவசர சிகிச்சைப் பிரிவு, உள் மற்றும் வெளி நோயாளிகள் வார்டுகள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றின் மாதிரி அமைப்புகள் இடம்பெற்றிருந்தன.