பக்கத்துவீட்டுகாரர் உடன் சண்டை? கலெக்டர் ஆபிஸ் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு!
Author
manikandan
Date Published

செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு நபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து செங்கல்ப்ட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆட்சியர் அலுவலகம் முன்பு, அதாவது வெளியே பாபு என்ற நபர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இங்கு பார்த்த வரையில், அவரது உடல்நிலை (இதயத்துடிப்பு எல்லாம்) நிலையானதாக இருந்தது. மேல்சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளோம். அதில் ஒரு மருத்துவர் உட்பட 4 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் உடன் சென்றுள்ளனர் . உடன் ஒரு காவலரும் சென்றுள்ளார். 70% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் போக்குவரத்து இடையூறின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீக்குளித்த நபரின் வீட்டிற்கு தகவல் சொல்லிவிட்டோம். அவர் (பாபு) கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தீக்குளித்துள்ளார். இதுகுறித்து நாங்கள் காவல் ஆணையர் அலுவலத்திலும் பேசிவிட்டோம். தீக்குளித்த நபருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே எதோ தகராறு. மழை சமயத்தில் அங்குள்ள மழைநீர் இவர்கள் வீட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது. 10 வருடமாக இந்த பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி தாசில்தார் வருவாய்த்துறை அதிகாரி ஆகியோரிடம் பேசியுள்ளோம். " என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.