"ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க"...திமுக எம்எல்ஏ-வின் அநாகரிக பேச்சு!
Author
bala
Date Published

தேனி :ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெண்கள் இலவச பேருந்து பயணத்தை "ஓசி" என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் சமுதாயக் கூடம் திறப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு, அமைச்சர் பொன்முடி இதேபோல் "ஓசி" என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார், மேலும் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது.மகாராஜனின் பேச்சு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாகவும், இது திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை தூண்டியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் மகாராஜனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி அல்லது கட்சி பதவி குறித்து எந்த மாற்றமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கண்டனங்கள் மட்டும் வேகமாக எழுந்திருக்கிறது.
அதன்படி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் "பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்" எனவும் பதிவிட்டுள்ளார்.
unknown node