Payload Logo
தமிழ்நாடு

"உடனே முதல்வர் ஆக முடியாது"... விஜய்க்கு குறித்து அன்பில் மகேஷ் கருத்து!

Author

bala

Date Published

anbil mahesh VIJAY TVK

சென்னை :த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் " 1949-இல் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது உடனே எல்லாம் யாரும் முதலமைச்சர் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதைப்போல அரசியலில் நிற்கவேண்டும் என்று கூட யாரும் நினைக்கவில்லை.

மாநாடு நடத்தி பலரிடம் கேட்டு 8 -ஆண்டுகளுக்கு பிறகு தான் 15 பேர் சட்டமன்றத்திற்கே வருகிறார்கள். எனவே, எடுத்தவுடன் முதல்வர் ஆக முடியாது. மறைந்த அண்ணன் விஜயகாந்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் படிப்படியாக உழைத்து ரசிகர்கள் மன்றத்தை உருவாக்கி மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதெல்லாம் செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்கள் தான். எனவே, உடனே அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவேண்டும் என்பதற்கு இது பர்ஸ்ட் புட் கடை கிடையாது.

ஒரு படம் 100 நாள் ஓடியதற்காகவே மட்டுமே முதல்வர் பதவிக்கு தகுதியாக இருந்துவிடக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. முதலில் விஜய் மக்களை புரிந்துகொள்ளவேண்டும். விஜய்க்கு பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. " எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில்,  அரசியலுக்கு வந்த பிறகு தலைவராக தன்னை ஒருவர் நிலைநிறுத்திய பிறகு எப்படி பேசவேண்டும் என்பது முக்கியம்.

நாம் பேசும் பேச்சுகளுக்கு ஒவ்வொரு அர்த்தமும் உண்டு. மக்கள் நீங்கள் இந்த விஷயங்களை மேடைப்பேச்சுக்காக பேசுகிறீர்களா? கைதட்டல் வாங்குவதற்காக பேசுகிறீர்களா? என்பதை பார்ப்பார்கள். மற்ற கட்சிகள் மட்டும் இல்லை எங்களையும் மக்கள் அப்படி தான் பார்ப்பார்கள். விஜயை யாரோ அரசியலில் இறங்கவேண்டும் என இயக்குவதாக எங்களுடைய எண்ணம் இருக்கிறது" எனவும் அவர் தெரிவித்தார்.