''மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது'' - பிரதமர் மோடி.!
Author
gowtham
Date Published

ஆந்திர பிரதேசம்:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 'யோகாந்திரா' நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அவருடன் சேர்ந்து அம்மாநில ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெளியிட்டனர்.
'Yoga for One Earth, One Health' கருப்பொருளுடன் இந்த வருடம் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பின்னர், யோகாவின் முக்கியத்துவத்தை குறித்து மக்களிடையே எடுத்துரைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ''இந்தியாவின் பண்பாட்டுத் தத்துவம் “சர்வே பவந்து சுகின" . அதாவது எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
உலக மக்களின் அன்றாட அங்கமாக மாறியுள்ள யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு தந்தது, மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசியுள்ளேன். யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.
யோகக்கலை வெறும் உடற்பயிற்சிக்கானது அல்ல. அது வாழ்க்கைக்கான ஆதாரமாய் விளங்குகிறது. மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த உதவும் யோகா.
யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது, மகிழ்ச்சி தருகிறது. யோகா அனைவருக்குமானது, அதற்கு எல்லைகள் கிடையாது. மீண்டும் ஒருமுறை ஆந்திர மக்களுக்கும், யோகா மேற்கொள்வோருக்கும் வாழ்த்துகள்'' என்றார்.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. யோகா தினத்தின் 10-வது ஆண்டு விழாவையொட்டி, கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் அமைப்பு (ICCR) இதை நடத்துகிறது. 15 நாடுகளை சேர்ந்த 17 யோகா குருக்கள் இந்த நிகழ்வுகளை கண்காணிப்பார்கள்.