Payload Logo
கிரிக்கெட்

WTC : தென் ஆப்பிரிக்காவை அதிரவிட்ட பேட் கம்மின்ஸ்! 300 விக்கெட் எடுத்து அசத்தல் சாதனை!

Author

bala

Date Published

Pat Cummins

லண்டன் :ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.

இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் பதிவாகியுள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை குறைந்த பந்துகளில் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 13,725 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் பட்டியலில் ககிசோ ரபாடா (11,817 பந்துகள்), வக்கார் யூனிஸ் (12,602 பந்துகள்), டேல் ஸ்டெய்ன் (12,605 பந்துகள்), மற்றும் ஆலன் டொனால்ட் (13,672 பந்துகள்) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர். கம்மின்ஸின் இந்த சாதனை, அவரது தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சு மற்றும் அணிக்கு அவர் அளித்த முக்கிய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.

2011இல் 18 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கம்மின்ஸ், காயங்கள் மற்றும் இடையூறுகளை மீறி, தனது வேகத்தையும் துல்லியத்தையும் பயன்படுத்தி இந்த மைல்கல்லை அடைந்துள்ளார்.இந்த சாதனையை அவரது அணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் உலகம் பெரிதும் பாராட்டியுள்ளது. “இது ஒரு மகத்தான சாதனை. கம்மின்ஸ் இந்த யுகத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்,” என அவரது அணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியது மேலும் சிறப்பான ஒரு தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்த மாதிரி முக்கியமான போட்டியில் பந்துவீச்சாளராக மட்டுமின்றி கேப்டனாகவும் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தங்களை மீறி அவர் இப்படியான சாதனையை நிகழ்த்தியிருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.