Payload Logo
கிரிக்கெட்

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

Author

bala

Date Published

rohit sharma hardik pandya

டெல்லி :2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்து வருகிறது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 177 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது, அதைத் துரத்திய ஆப்பிரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமையை சேர்த்து.

இந்த வெற்றிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஏனென்றால்,  பாண்ட்யா தனது அற்புதமான பந்துவீச்சால் டீம் இந்தியாவுக்காக போட்டியை வென்றார். போட்டியை வென்ற பிறகு, ரோஹித் சர்மா மைதானத்தின் நடுவில் ஹர்திக் பாண்டியாவின் கண்ணத்தில் முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

இதனையடுத்து, முதல் முறையாக அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை ரோஹித் இப்போது வெளிப்படுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது குறித்து பேசும்போது " என்னை பொறுத்தவரை அது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய ஹர்திக் பாண்டியா எனக்காகவும், அணிக்காகவும் உழைத்தார். அவர் மட்டும் இல்லை என்றால் நிச்சயமாக எங்களுக்கு கோப்பை வந்திருக்காது. வெறும் கையை தான் வீசி விட்டு சென்றியிருப்போம்" எனவும் ரோஹித் சர்மா கூறினார்.

மேலும், இறுதிப்போட்டியில், 17வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தபோது , ​​ஹென்ரிச் கிளாசென் அற்புதமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்தவரை தென்னாபிரிக்க அணி பக்கம் தான் வெற்றி இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால், ஹர்திக் அந்த ஓவரின் முதல் பந்திலேயே கிளாசனை அவுட்டாக்கினார். கிளாசென் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்டியா முழு ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதிலிருந்து போட்டி முற்றிலும் மாறி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.