Payload Logo
தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

Author

bala

Date Published

geetha jeevan Anganwadi

சென்னை :தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும் வைரலானது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியாக பரவும் செய்தியா? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 7, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,  நாளிதழ் ஒன்றில் வெளியான “போதிய ஊழியர்கள் இல்லாததால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன” என்ற செய்தியை அவர் மறுத்து விளக்கம் கொடுத்தார். “தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. மாறாக, தேவைப்பட்டால் கூடுதல் மையங்களை ஏற்படுத்த அரசு தயாராக உள்ளது,” என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதிப்படுத்தினார். இந்த விளக்கம், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் (ICDS) கீழ் 54,483 அங்கன்வாடி மையங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். “இந்த மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, முன்பள்ளி கல்வி, மற்றும் ஆரோக்கிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. எந்த மையமும் மூடப்படவில்லை, மாறாக, ஊழியர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று அவர் விளக்கினார். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை என்று அவர் தெரிவித்தார். அதே சமயம்,  இது தொடர்பான தவறான தகவல்கள் பரவுவது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.  அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், இந்த மையங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்கு அடித்தளமாக விளங்குவதாக கூறினார். “தமிழ்நாடு அரசு, குழந்தைகளின் நலனை முதன்மையாக கருதி, அங்கன்வாடி மையங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. ஊழியர்களின் காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,” என்று கீதாஜீவன் தெரிவித்தார்.  மேலும், மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது, மையங்களின் செயல்திறனை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.