விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!
Author
bala
Date Published

சென்னை :கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மாநாடு நன்றாக நடந்தாலும் மாநாட்டில் நடந்த சில விஷயங்கள் சர்ச்சையாக வெடித்துள்ளது. உதாரணமாக, இந்த மாநாட்டில் ஒழிப்பரப்பட்ட வீடியோவில் பெரியார் அண்ணா குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. மேலும் திராவிடத்தை ஒழிப்போம் என்ற போஸ்டர்களும் ஓட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாநாட்டில் அண்ணா பெயரை வைத்துள்ள அதிமுக கட்சியினரே பங்கேற்றது தமிழகம் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது.
எனவே, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன் " என்னைப்பொறுத்தவரையில், பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தும் பாஜக, சங்பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமமானது என்று தான் சொல்வேன்" என தெரிவித்தார்.
அத்துடன், "முருக மாநாட்டில் பெரியாரை விமர்சித்த பின்னரும் விஜய் இன்னும் எதுவும் பேசவில்லை. அப்படி பேசாமல் அமைதி காப்பது ஏன்? அவர் அமைதி காப்பதை வைத்து பார்க்கையில் பெரியாரை விஜய் முழுமையாக ஏற்றுக்கொண்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அதைப்போல, பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜக பி டீம் என்று தான் கூறமுடியும்" எனவும் வெளிப்படையாகவே திருமாவளவன் பேசினார்.