Payload Logo
தமிழ்நாடு

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

Author

bala

Date Published

aadhav arjuna kubera

சென்னை :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவலை கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் தொடங்கி, 42 நாட்களில் 38 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம், தொழிற்சங்கம் தொடங்குதல், மற்றும் தேர்தல் சின்னமாக ஆட்டோவை பெறுவதற்கான விண்ணப்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதைப்போல, விஜய் எப்போது முழு நேர அரசியல் பயணத்தில் இறங்க போகிறார்? என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துகொண்டு இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஜூன் 3-ஆம் தேதி அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து முழு நேர அரசியலில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. அதற்கு அடுத்த நடவடிக்கையாக தற்போது சுற்றுப்பயணத்தின் மூலம், விஜய் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து, கட்சியின் கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் மக்களை சந்தித்து குரல் கொடுத்திருந்தார். இதனையடுத்து, இப்போது ஆகஸ்ட் 15 முதல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அரசியல் களத்தில் அவருடைய செயல்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா  கூறியதாவது " ஒரே மாதத்தில் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அதைப்போல, தேர்தலில் விஜய் வெற்றிபெற்றுவிட்டார் என்றால் சர்கார் படத்தில் உள்ளதை விட நிறையவே உதவி செய்வார்" எனவும் தெரிவித்தார்.