“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!
Author
gowtham
Date Published

சென்னை :மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், "என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன், மதுரையில் தந்தையாகிய சிவனும் தாயாகிய பார்வதியும் மகனான முருகனும் உள்ளனர்.
முருகனின் அவதாரமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளார் என மக்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் மதுரை இருளில் மூழ்கிக் கிடந்தது. மீனாட்சி அம்மன் கோவில் விளக்கேற்றப்படாமல் இருண்டு இருந்தது. குமரி முதல் காஷ்மீர் வரை இந்து மதம் ஆழமாக வேரூன்றி உள்ளது.
என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்ய வேண்டாம். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்.. இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்.. இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்குப் பிரச்சனை" சீண்டிப் பார்க்காதீர்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய சேகர் பாபு, தமிழ்நாட்டிற்கும், பவன் கல்யாணுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.
யார் அவர்? "மஞ்சள் அரைத்தாயா? களை பறித்தாயா? தமிழ்நாட்டுக்கும், பவன் கல்யாணுக்கும் என்ன சம்பந்தம்?சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். பிறகு அவர் பேசட்டும். அவர் தமிழ்நாட்டில் அரசியல் பேச என்ன இருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்லட்டும். பின்னர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நாங்கள் கேட்கிறோம்" என்று சவால் விடுத்துள்ளார்.