Payload Logo
தமிழ்நாடு

"பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?" - செல்வப்பெருந்தகை பேச்சு!

Author

bala

Date Published

selvaperunthagai ramadoss

விழுப்புரம்:பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் (ஜூன் 27) இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இன்னுமே  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது? இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தேன், அரசியல் பேசவில்லை” என்று தெரிவித்தார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே தலைவர் பதவி மற்றும் கட்சி நிர்வாகம் தொடர்பாக கடும் மோதல் நீடித்து வருகிறது. இதற்கு திமுக காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, ராமதாஸ், “பாமகவில் குழப்பத்திற்கு திமுக காரணம் என்று அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்” என்று பதிலளித்திருந்தார். இதனையடுத்து, செல்வப்பெருந்தகை, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்தபோதும் ராமதாஸை சந்தித்து உடல்நலம் விசாரித்திருந்தார். இந்த சந்திப்பு, பாமகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கு மத்தியில், 2026 தேர்தல் கூட்டணி குறித்த ஊகங்களை எழுப்பியுள்ளது, இருப்பினும் செல்வப்பெருந்தகை அரசியல் பேச்சு எதுவும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

அதே சமயம், இந்த சந்திப்பு, பாமகவின் தற்போதைய உட்கட்சி நெருக்கடியை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. ராமதாஸ், தான் கட்சியின் தலைவராக தொடர்வதாகவும், 2026 தேர்தல் கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார், அதேநேரம் அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.