Payload Logo
தமிழ்நாடு

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Author

bala

Date Published

anbil mahesh

சென்னை :தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டப்படும். இது குறித்த அறிவிப்பை அவர் தனது  எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

இது குறித்து பேசிய அவர் “கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்,” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்தத் திட்டம், கோடை மாதங்களில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மாணவர்களின் உடல்நலத்தையும், கவனத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.

இந்த முயற்சி, தமிழ்நாட்டில் உள்ள 37,211 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும். பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதிகளை உறுதி செய்யவும், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதும், அன்பில் மகேஷ்  கூறியதை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. மாணவர்களிடையே ஆரோக்கியமான பழக்கத்தை ஊக்குவிக்க, இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 'வாட்டர் பெல்’ திட்டம், தமிழ்நாடு அரசின் மாணவர் நலன் சார்ந்த முயற்சிகளில் ஒரு முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற பிற நலத்திட்டங்களுடன் இணைந்து, இது மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.