Payload Logo
இந்தியா

வயநாடு : தொடரும் கனமழை...முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

Author

bala

Date Published

WayanadRain

கேரளா :மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன் 25) வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அச்சம் ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே, கடந்த ஆண்டு (2024) ஜூலை 30ஆம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த துயர சம்பவம் நடந்து 1 ஆண்டுகள் ஆக போகும் நிலையில், மீண்டும் அதே போலவே வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மீண்டும் பெய்து வரும் கனமழையால், முண்டக்கை ஆற்றில் மண் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. முண்டக்கையில் ராணுவம் அமைத்த தற்காலிக பெய்லி பாலம் அதிரும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நிலச்சரிவால் சிதைந்த வீடுகளுக்கு இடையே வெள்ளம் பாய்ந்தோடுவது, மக்களுக்கு கடந்தகால பேரழிவை நினைவூட்டுவதாக உள்ளது. மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட குழுவினர் வயநாடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், மேப்பாடி, முண்டக்கை பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வயநாடு மாவட்ட ஆட்சியர், முண்டக்கையில் புதிய நிலச்சரிவு ஏற்படவில்லை என்று விளக்கமளித்தாலும், தொடர் மழையால் ஆற்றில் மண் கலந்த நீர் பாய்வது இயல்பானது என்று தெரிவித்தார். இருப்பினும், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.