Payload Logo
தமிழ்நாடு

"கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல" - விஜய் கடும் விமர்சனம்.!

Author

gowtham

Date Published

keeladi tn - tvk vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள் பாஜகவின் புராணக் கதைகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் தொகுக்கப்பட்டவை" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.

அசாமைத் தொடர்ந்து கோவா பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால். பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது.

ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று.

ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால். விளைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால், அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

unknown node