கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? - மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் விளக்கம்.!
Author
gowtham
Date Published

சென்னை :கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின.
இந்த ஆய்வுகள் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் 982 பக்க அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். ஆனால், இந்த அறிக்கையை மத்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை.கடந்த 2 ஆண்டுகளாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் போட்டுள்ள மத்திய அரசு, அறிக்கையில் “திருத்தம் தேவை” எனக் கூறி, ஆய்வறிக்கையை திருத்தி சமர்ப்பிக்க ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கோரியது. இதற்கு, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்தியத் தொல்லியல்துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
தற்பொழுது, சென்னையில பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறியதாவது, ''கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன. அதன் பிறகே தொல்லியல் துறையின் அறிக்கை அங்கீகரிக்கப்படும்'' என கஜேந்திரசிங் ஷெகாவத் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.