"இது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்"...இரங்கல் தெரிவித்த அனில் கும்ப்ளே!
Author
bala
Date Published

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில், எதிர்பாராதவிதமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
மேலும், இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த துயர சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூரைச் சேர்ந்தவருமான அனில் கும்ப்ளே, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள். மிகவும் பெரிய துயரம்.. ஆர்சிபி-யின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.