Payload Logo
உலகம்

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

Author

bala

Date Published

israel vs iran

இஸ்ரேல் :ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும் கோண்டாப் (Khondab) நகரங்களில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது. “அராக் மற்றும் கோண்டாப் நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குடிமக்கள், உங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில், இஸ்ரேல் இராணுவம் இந்தப் பகுதிகளில் இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்,” என்று IDF-ன் அரபு மொழி பேச்சாளர் கர்னல் அவிச்சே அட்ரீ X-இல் பதிவிட்டார்.

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இஸ்ரேல் நடத்தி வரும் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ இன் ஒரு பகுதியாகும். அராக் பகுதியில் உள்ள ஈரானின் கனரக நீர் உலை (Heavy Water Reactor) மற்றும் கோண்டாப் நகரில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி மையங்கள் இலக்காக இருக்கலாம் என்று இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதிகளில் ஈரானின் புரட்சிப் படையின் (IRGC) ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்களும் உள்ளன.

ஈரான், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் III’ இன் கீழ், இஸ்ரேலின் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களில் புதிய வகை செஜில் (Sejil) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் பல அடுக்கு வான்பாதுகாப்பு அமைப்புகளை குழப்புவதற்கு வடிவமைக்கப்பட்டவை என்று ஈரான் புரட்சிப் படை கூறியது. இதற்கு மறுப்பாக, இஸ்ரேல், தெஹ்ரானின் லாவிசான் (Lavizan) பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியதாகவும், இதில் ஈரானின் உளவுத்துறை மையம் அழிக்கப்பட்டதாகவும் அறிவித்தது.

இந்த மோதல், ஜூன் 13 முதல் தொடர்ந்து 7-வது  நாளாக நீடிக்கிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்ததாகவும், 600-க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.