Payload Logo
தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Author

bala

Date Published

onlinegaming

சென்னை :சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு குறித்த விதிமுறைகள் செல்லும் என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம்’ இதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுகளால் பயனர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், பொது நலனைப் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், 2023 பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்குவதுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுகளை தடை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த விதிமுறைகள், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் மற்றும் பிற எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், அதே சமயம் இந்த உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விளையாட்டு நிறுவனங்கள், இந்த விதிமுறைகள் தங்களின் வணிக சுதந்திரத்தையும், பயனர்களின் தனியுரிமையையும் பாதிக்கும் என வாதிட்டன. இரு தரப்பு வாதங்களும் விரிவாக ஆராயப்பட்ட பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின், ஜூன் 2, 2025 அன்று, நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்து, விளையாட்டு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு, ஆன்லைன் விளையாட்டுத் துறையில் ஒழுங்குமுறையை அமல்படுத்துவதற்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.