ஸ்ரீ காந்த் விவகாரம் : "40 முறை போதைப்பொருள் விற்றேன்"..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
Author
bala
Date Published

சென்னை :தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (Narcotics Control Bureau - NCB) காவல்துறையினர், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தில், “நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருளை ரூ.12,000-க்கு வாங்கி பயன்படுத்தினார்,” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பிரசாத், சென்னையில் சமீபத்தில் நடந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொக்கைன் விநியோகித்ததாக அவர் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தகவலை தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறையினர் மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஸ்ரீகாந்த் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பலவிதமான விவாதங்களை உருவாக்கியுள்ளது. அதே சமயம், காவல்துறையினர், இந்த வழக்கில் மேலும் சில பிரபலங்களை விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் கொக்கைன் சப்ளே செய்ததாக பிரதீப் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். ஏற்கனவே, இந்த செய்தி பெரும் புயலை போல பரபரப்பை கிளப்பியிருக்கும் சூழலில், பிரதீப் காவல்துறையில் கொடுத்த பகீர் வாக்குமூலம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தும் மற்றொரு நடிகரும், பிரசாத் மூலமாக தான் தன்னிடம் இருந்து கொக்கைன் பெற்றனர் எனவும், ஸ்ரீகாந்தும் மற்றோரு நடிகரும் கொக்கைன் பயன்படுத்தியதை நேரில் பார்த்திருக்கிறேன். பிரசாத்திற்கு 40 முறை போதைப்பொருள் விற்று ரூ.5 லட்சம் வரை சம்பாதித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.