Payload Logo
கிரிக்கெட்

WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?

Author

bala

Date Published

SAvAUS

லண்டன் :தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்(World Test Championship )இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மைல்கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் ட்ரோபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை.

எனவே, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கனவு ஐசிசி  கோப்பையை வெல்லவேண்டும் என்பதாக இருந்து வந்தது. இந்த கனவு நிறைவேறுமா என ரசிகர்கள் மற்றும் அணியின் முன்னாள் வீரர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், அணியின் கேப்டன் பவுமா முதல் முறையாக கோப்பையை வாங்கிக்கொடுத்து தென்னாப்பிரிக்க நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருடைய தலைமை இந்த போட்டியில் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தாலும் கூட மற்றொரு முக்கியமான காரணம் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஐடன் மார்க்ராம் (136ரன்கள்) என்று சொல்லலாம்.

ஏனென்றால், தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற இந்த போட்டியில் 282 ரன்கள் இலக்காக நிர்ணயம் ஆனவுடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா  நிதானமாக விளையாடியது. அதிலும் குறிப்பாக ஐடன் மார்க்ராம் தன்னுடைய விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். மூன்றாவது நாள் முடியும்போது சதம் விளாசிய அவர் அணியை சரியான இடத்தில் வைத்து வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டார்.

பிறகு, இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நேற்று எப்படி சதம் விளாசியபோது விளையாடினாரோ அதே போலவே கடைசி வரை நின்று போட்டியை முடித்துக்கொடுத்து கோப்பையை வாங்கவேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடினார். இருப்பினும், 136 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்த நிலையில், அணியில் மீதம் விக்கெட் இருந்த காரணத்தால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. அதன்படி, 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) (இந்திய மதிப்பின் படி  30.79 கோடி ) பரிசுத் தொகை வழங்கப்படும் என முன்னதாகவே ஐசிசி அறிவித்திருந்தது. எனவே, வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு கோப்பையுடன் அந்த தொகையும் பரிசாக  வழங்கப்படவிருக்கிறது.

அதே சமயம் தோல்வியடைந்த அணிக்கும் இறுதிப்போட்டியில் 1.75 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) (இந்திய மதிப்பின் படி, 14.96 கோடி ரூபாய்) வழங்கப்படும், எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த ஆஸ்ரேலியாவுக்கு அந்த தொகை வழங்கப்படுகிறது.