சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்.!
Author
gowtham
Date Published

சென்னை :சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கம்டா அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) நேற்றைய தினம் அண்ணாநகரில் நகரின் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் செயல்படுத்தும் திட்டம் குறித்து பொது கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் CUMTA, GCC மற்றும் கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட பிற துறைகளும் கலந்து கொண்டனர்.
அண்ணா நகரில், மூன்று இடங்களை பார்க்கிங் இடங்களாகப் பயன்படுத்தலாம் என்று FOARA-வின் தலைவர் ஆர். சுகுமார், அண்ணா நகர் கிழக்கு பேருந்து நிலையம் மற்றும் அண்ணா நகர் டவர் பூங்காவை பல நிலை கார் பார்க்கிங் இடங்களாகப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.
இருப்பினும், அவரது பரிந்துரையை ஜி.சி.சி.யின் பிராந்திய துணை ஆணையர் (மத்திய) கே.ஜே. பிரவீன் குமார் எதிர்த்தார். "கோடம்பாக்கம் பல நிலை பார்க்கிங் இன்னும் பாதுகாக்கப்படாமல் உள்ளது, அது பொதுமக்களால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வீதிகளில் தெருக்களில் ஸ்மார்ட் பார்க்கிங்கிற்காக CUMTA 25 கி.மீ சாலை வரைபடத்தை உருவாக்கியுள்ளது.இறுதியில், 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ. 40 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மட்டுமின்றி, குடியிருப்புச் சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் இணைக்கப்படுகிறது. அண்ணா நகரில் வீடுகளில் பார்க்கிங் இல்லாத கார் உரிமையாளர்கள் வீட்டின் முன் சாலையில் காரை நிறுத்தவும் கட்டணம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் முன்கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம். யுபிஐ, ரொக்கப் பரிவர்த்தனை முறைகளில் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.