Payload Logo
விளையாட்டு

RCB ரசிகர்கள் உயிரிழப்பு - கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா!

Author

bala

Date Published

rcb fans celebration death ksca

பெங்களூர் :சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது.

மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), RCB மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான DNA நிறுவனம் ஆகியவை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த சம்பவத்திற்கு மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், RCB, KSCA மற்றும் DNA நிறுவனத்தின் பிரதிநிதிகளை கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக  மறு உத்தரவு வரும் வரை KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இப்படியான சூழலில், இந்த சம்பவத்தை அடுத்து, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தார்மீக பொறுப்பை ஏற்று, இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

அது மட்டுமின்றி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பட், செயலாளர் சங்கர், மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினர். அது என்னவென்றால், RCB வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் மைதானத்தின் நுழைவு வாயில் மேலாண்மை (கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வாயில்களை நிர்வகித்தல்) ஆகியவை தங்களுடைய பொறுப்பு இல்லை என விளக்கம் அளித்தனர்.

இந்த ஏற்பாடுகளை KSCA நேரடியாக கவனிக்கவில்லை, மாறாக வேறு நிறுவனங்கள் ( DNA நிறுவனம்) இதை செய்ததாக அவர்கள் வாதிட்டனர். அப்படி இருந்தாலும் கூட, இந்த சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததற்கு தார்மீகப் பொறுப்பு (moral responsibility) ஏற்க வேண்டும் என்று உணர்ந்து, சங்கர் மற்றும் ஜெய்ராம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.