Payload Logo
தமிழ்நாடு

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

Author

bala

Date Published

Ramapuram accident

சென்னை :ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே, இரண்டு I-கிர்டர்கள் (ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை) திடீரென இடிந்து விழுந்தன.இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 10 வயது மகள் உள்ளனர்.

விபத்து ஏற்பட்டவுடன், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் ஒப்பந்த நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) ஆகியவை உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டன. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரமேஷின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விபத்தால் மவுண்ட்-பூனமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்டுமானத்தில் ஏற்பட்ட பிழைகளால் கிர்டர்கள் இடிந்ததாகவும், ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவு மற்றும் தற்காலிக A-பிரேம் ஆதரவு அமைப்பில் ஏற்பட்ட தோல்வியே விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது. மேலும், விபத்துக்கு நேரடியாக பொறுப்பான L&T-யின் முதன்மை பாதுகாப்பு மேலாளர் (ESHS), மூத்த ESHS மேலாளர், பாதுகாப்பு பொறியாளர், மற்றும் பொது ஆலோசகரின் (General Consultant) மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய நான்கு பொறியாளர்கள் மெட்ரோ திட்டப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

விசாரணை அறிக்கையில், கிர்டர்களுக்கு முறையான ஆதரவு அளிக்கப்படவில்லை என்றும், 33.3 மீட்டர் நீளமுள்ள I-கிர்டர்களை தாங்குவதற்கு தேவையான டர்ன்பக்கிள் மற்றும் A-பிரேம் அமைப்புகள் போதுமான வலிமையுடன் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கான்கிரீட், A-பிரேம், மற்றும் டர்ன்பக்கிள் ஆகியவற்றின் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று பாதுகாப்பு ஆய்வு உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மவுண்ட்-பூனமல்லி சாலை மற்றும் IT காரிடரில் உள்ள அனைத்து I-கிர்டர்களையும் பரிசோதித்து, கூடுதல் ஆதரவு கம்பிகள் மற்றும் வெல்டிங் மூலம் பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரமேஷின் குடும்பத்துக்கு CMRL சார்பில் ரூ.5 லட்சமும், L&T நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சமும் உடனடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டன. நந்தம்பாக்கம் காவல்துறை, L&T நிறுவனம் மற்றும் திட்ட மேலாளர்கள் மீது பாரதிய நியம சட்டம் (BNS) பிரிவு 105 (கொலைக்கு ஒப்பான கவனக்குறைவு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.