3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி!!
Author
gowtham
Date Published

டெல்லி :ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு , பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூன்று வெளி நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முதலில், பிரதமர் மோடி சைப்ரஸை அடைவார். பின்னர் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இறுதியாக, அவர் குரோஷியாவிற்கும் செல்வார். குறிப்பாக, கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது ஐந்து நாள் வெளிநாட்டுப் பயணம் ஜூன் 15 முதல் 16 வரை சைப்ரஸில் தங்குவதோடு தொடங்கும். பின்னர் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் G7 உச்சிமாநாட்டிற்காக கனடாவில் உள்ள கனனாஸ்கிஸுக்குச் செல்வார். சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதியாக ஜூன் 18 அன்று குரோஷியாவுக்குச் செல்வார், ஜூன் 19 ஆம் தேதி அவர் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, முதலில் சைப்ரஸ் நாட்டில், பிரதமர் மோடி அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதிப்பார்.
இரண்டாம் கட்டத்தில், கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா செல்வார். அப்பொழுது, எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி குரோஷியா குடியரசுக்குச் சென்று அதிபர் ஜோரன் மிலானோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் ஆகியோரைச் சந்திப்பார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை.
unknown node