Payload Logo
உலகம்

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா?

Author

bala

Date Published

Ali Khamenei donald trump

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025 ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக கமேனியை இலக்காக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் டிரம்ப், “ஈரானியர்கள் இன்னும் ஒரு அமெரிக்கரைக் கொல்லவில்லை, எனவே அரசியல் தலைவர்களை இலக்காக்குவது பற்றி பேச வேண்டாம்” என்று எதிர்த்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தகவல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை நேரடியாக மறுக்கவில்லை, ஆனால் “பல தவறான தகவல்கள் பரவுகின்றன, இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்குவதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், தேவைப்பட்டால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் இஸ்ரேலின் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. மூன்று நாட்களாக தொடரும் இந்த மோதல் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இப்படியான பரபரப்பு சூழலில், அமெரிக்காவின் பங்கு குறித்து, டிரம்ப் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்குவதாக ஈரான் அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க, டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதே சமயம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தான் மத்தியஸ்தம் செய்து அமைதியை ஏற்படுத்தியதாகவும், இதேபோல் இஸ்ரேல்-ஈரான் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எனவே, பேச்சுவார்த்தைக்கு ஈரான் மற்றும் இஸ்ரேல் உடன் படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.