Payload Logo
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியின்போது விபத்து - ஒருவர் பலி!

Author

gowtham

Date Published

Tragic accident - Chennai Metro

சென்னை :மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் நேற்று இரவு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ராட்சத 'கர்டர்' சரிந்து விழுந்தது. இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போரூர் - நந்தம்பாக்கம் ரயில்வே பாலத்தின் கீழ் வாகனப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராட்சத கிரேன் மூலம் கர்டர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நேற்றிரவு அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது பதிவில், மணப்பாக்கத்தில் எல் & டி நிறுவனம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட இரண்டு "I" வடிவ இரும்புதூண்கள் எதிர்பாராத விபத்தில் சரிந்து விழுந்துவிட்டன.

அவற்றை தாங்கி இருந்த A-frame ஒரு கட்டமைப்பு கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் (CMRL) மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய விரைவில் விசாரணை நடத்தப்படும். விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.