ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!
Author
gowtham
Date Published

டெல்லி :ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2020இல் சனாவில் உள்ள தொடக்க நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2023இல் யேமன் உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. தற்போது, ஜூலை 16-ஆம் தேதி அன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நிமிஷாவின் குடும்பமும் ஆதரவாளர்களும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சமாதானம் செய்ய 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை “ரத்தப் பணம்” செலுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதுவரை பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவருக்கு 36 வயது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் வேலைக்காக ஏமனுக்குச் சென்றார். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் அவரை கூலி வேலை செய்து வெளிநாட்டிற்கு அனுப்பினர். ஏமனின் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், 2015-ல் உள்ளூர் கூட்டாளியான தலால் அப்தோ மெஹதியுடன் இணைந்து கிளினிக் தொடங்கினார். நாளடைவில் அவர்களது உறவு தலைகீழாக மாறியிருக்கிறது. நிமிஷாவின் கூற்றுப்படி, தலால் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவரை அச்சுறுத்தியதாகவும், நிதி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றபோது, தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தியதில் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு, அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதன்பின், 2018-ல் நிமிஷா கைது செய்யப்பட்டு, 2020-ல் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு 2023-ல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது, 2024 டிசம்பர் 30-ல் யேமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை அங்கீகரித்தார். இப்பொது, நிமிஷாவுக்கு வரும் ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டுவிட ‘Save Nimisha Priya Council’ என்ற அமைப்பு இறுதி முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிமிஷாவின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.