கூட்டணிக்காக பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
Author
bala
Date Published

சென்னை :தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
தேமுதிகவும் பாஜகவும் கடந்த தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டிருந்தாலும், தற்போது எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் இல்லை என பிரேமலதா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஊடகங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, அவர் " தங்கள் கட்சி எப்போதும் மக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படும்" என்று கூறினார். மேலும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிக தலைமை மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.
இது குறித்து பேசிய அவர் " வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இதற்காக, மாநில மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. மேலும், ஜனவரி 9 அன்று கடலூரில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம், அதைத் தொடர்ந்து எங்கள் பயணம் தொடரும். பாஜகவிடமிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இல்லை என்று நாங்கள் எங்கும் கூறவில்லை.
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்தோம், இது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு. எந்தக் கட்சியாக இருந்தாலும், பிறந்தநாள் வாழ்த்து கூறுவதும், அதற்கு நன்றி தெரிவிப்பதும் அரசியல் மரியாதை. இதைத்தான் நாங்கள் செய்தோம். இதனால் கூட்டணி மாறுகிறதா அல்லது தொடர்கிறதா என்று கற்பனை செய்ய வேண்டாம். கூட்டணி குறித்த இறுதி முடிவை, ஜனவரி 9 அன்று கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் தலைமைக் கழகம் அறிவிக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.