Payload Logo
தமிழ்நாடு

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

Author

bala

Date Published

PremallathaVijayakant

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் தேவை. நிதானமாக யோசித்து, சரியான முடிவு எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

செய்தியாளர்கள் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்விகளை கேட்டு வருவதால் பிரேமலதா இன்று சற்று கோபம் அடைந்தார். கோபத்துடன் பேசிய அவர் " நான் பலமுறை கூட்டணி குறித்த கேள்விக்கு தெளிவான பதிலை சொல்லிவிட்டேன். ஆனால், நீங்கள் திரும்பி திரும்பி இந்த கேள்வியை தான் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். எனக்கு கூட்டணி குறித்து முடிவு எடுக்க கொஞ்ச நாட்கள் தேவைப்படுகிறது.

எனவே, முடிவு செய்தவுடன் உங்களிடம் தான் முதலில் சொல்வேன். வேறு யாரிடம் சொல்ல போகிறேன். அதுவரை நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நான் அறிவிக்கும் வரை இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்" எனவும் பேசினார். மேலும், 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் மாநாட்டில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், யார் வேட்பாளர்கள் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

அதிமுகவுடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்கு, பிரேமலதா தெளிவான பதிலை தவிர்த்து, “அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளதாக அவர்கள் கூறுவது அவர்களின் நிலைப்பாடு. எங்களது முடிவை மாநாட்டில் அறிவிப்போம்,” என்று குறிப்பிட்டார். மாநிலங்களவை தேர்தல் சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் விரிசல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்த அவர், “அதிமுக எங்களுக்கு எழுதி அளித்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை,” என்று விளக்கமளித்தார்.

திமுகவுடன் கூட்டணி குறித்து எழுந்த வதந்திகளுக்கு, பிரேமலதா அரசியல் உள்நோக்கம் இல்லாமல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பாராட்டியதாகவும், இது கூட்டணி பேச்சுவார்த்தையாக பார்க்கப்படக் கூடாது என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், “தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும்,” என்று கூறி, திமுக அரசுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.