Payload Logo
உலகம்

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

Author

bala

Date Published

abbas araghchi

தெஹ்ரான் :இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல போரில் இன்று அமெரிக்காவும் நேரடியாக இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய அணு உலைத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், இதை “பெரிய இராணுவ வெற்றி” என்றும் கூறினார்.

ஆனால், அமெரிக்கா தாக்குதலுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அந்த வகையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தத் தாக்குதல்கள் “ஆபத்தானவை, சட்டவிரோதமானவை, குற்றமானவை” என்று கூறிய அவர், “இவை நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்,” என்று எச்சரித்தார். ஈரானின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன்களை காக்க “எல்லா வழிகளையும்” பயன்படுத்துவோம் என்று அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஐநா விதிகளையும், அணு ஆயுத ஒப்பந்தத்தையும் மீறுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தத் தாக்குதல்கள் அமைதி பேச்சுவார்த்தைகளை அழித்துவிட்டதாகவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இராஜதந்திர முயற்சிகளை தோல்வியடையச் செய்ததாகவும் கூறினார். அது மட்டுமின்றி அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்றும் ஈரான், ஐநா விதிகளின்படி தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

ஏற்கனவே, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று எச்சரித்தார். மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை உடனடியாக தாக்குவோம் என்று IRGC தளபதி ஹொசைன் சலாமி அறிவித்தார். எனவே, ஈரான் தரப்பு திட்டவட்டமாக அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தாக்குதல் நடத்தலாம் எனவும் இதன் மூலம் தெரிகிறது. எனவே, இன்னும் பதற்றமான சூழல் அங்கு அதிகரித்துள்ளது.