தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

சென்னை :இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார். 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. முக்கிய கோரிக்கைகளில் தொழிலாளர் உரிமைகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சமூக பாதுகாப்பு, மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு ஆகியவை அடங்கும். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும்பாலும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கும் பேருந்து சேவைகளை கண்காணிக்கவும், தடையின்றி இயக்கவும் உத்தரவிட்டுள்ளார். முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என்று போக்குவரத்துக் கழக திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.