அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!
Author
bala
Date Published

சென்னை :தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. ஏற்கனவே, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது. இப்படியான சூழலில், இன்று அரக்கோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்னும் அதிமுகவில் கூட்டணிக்கு கட்சிகள் இணையலாம் என தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் எம்எல்ஏ ரவி இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்ட அவர் " தமிழகத்தில் தற்போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணையலாம். விரிவாக அதிமுக தலைமையில் பல கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும்" எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் திமுக 200 இடங்களில் வெற்றிபெறும்...200 இடங்களில் வெற்றிபெறும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால், என்னை பொறுத்தவரையில் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறுகின்ற தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவட்டடம் கூட தனி மாவட்டமாக மாறியதற்கு காரணமே அதிமுக தான். மொத்தமாக நாங்கள் ஆறு மாவட்டங்களை உருவாக்கி தந்திருக்கிறோம். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று திமுக ஒரு மாவட்டமாவது உருவாக்கியுள்ளதா? எனவும் கேள்விகளை முன் வைத்து பேசினார். மேலும், 2026-இல் அதிமுக தான் வெற்றிபெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.