Payload Logo
திரைப்பிரபலங்கள்

பேருந்தில் வரும் போது மாரடைப்பு...மதயானைக்கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

Author

bala

Date Published

madhayaanai koottam

சென்னை :தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran) மாரடைப்பால் காலமானார். ஜூன் 2, 2025 அன்று, மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் சாதி மோதல்களை அழுத்தமாக பதிவு செய்த இந்த படம், விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ போன்ற படங்களில் நடிகராகவும், ‘ஆடுகளம்’ படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர். அவரது முதல் படமே தமிழ் சினிமாவில் தனித்துவமான பதிவாக அமைந்தது.

மதயானைக் கூட்டம் படத்தினை தொடர்ந்து ‘ராவண கோட்டம்’ (2023) திரைப்படமும் விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில் வெளியாகி, சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் அரசியல் பிரச்சனைகளை எடுத்துரைத்து பேசப்பட்டது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது அடுத்த படமான ‘தேரும் போரும்’ படத்திற்காக தயாராகி வந்தார். ஆனால், இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

விக்ரம் சுகுமாரனின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இன்னும் இவருடைய இறுதிச்சடங்கு பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.