Payload Logo
இந்தியா

கேரளா: "இனிமே பிரியாணி தான்"..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

Author

bala

Date Published

Kerala Anganwadi

கேரளா :மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மூன்று மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய சிறுவன் ஷங்குவின் வீடியோ தான்.

வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஷங்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தான். இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, கேரள அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கவனத்திற்கு சென்றது.

ஷங்குவின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு அங்கன்வாடி மையங்களில் உணவு மெனுவை மேம்படுத்த முடிவு செய்தது. இதன் விளைவாக, முட்டை பிரியாணி, புலாவ், பருப்பு பாயாசம், சோயா கறி மற்றும் ஊட்டச்சத்து மிக்க சத்து உருண்டை ஆகியவை புதிய மெனுவில் சேர்க்கப்பட்டன. இந்த மாற்றம் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த முயற்சி, குழந்தைகளின் உணவு விருப்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவதற்கு ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. மேலும், கேரள அங்கன்வாடி மையங்களில் இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த உணவுகள், உப்புமா, கஞ்சி போன்றவை, சத்து நிறைந்தவை என்றாலும், குழந்தைகளுக்கு சுவை அளவில் பிடித்தமானவையாக இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்துகொண்டு இருந்தது.

அந்த சமயம் ஷங்குவின் வீடியோ இந்த பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அவரது கோரிக்கை, உணவு மெனுவில் புதிய உணவு வகைகளை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தையும் தூண்டியது. ஏற்கனவே, சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்த நிலையில் தற்போது சொன்ன வாக்கை காப்பாறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.