Payload Logo
திரைப்படங்கள்

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Author

bala

Date Published

Jana Nayagan Movie Release Date

சென்னை :தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ 2026 ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜனநாயகன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, இதில் விஜய் ஒரு காவல்துறை அதிகாரியாக சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் 69வது படமாக உருவாகி வருகிறது, மேலும் இது ஒரு சமூக ஆக்‌ஷன் நாடகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் எச்,வினோத் இயக்கியுள்ளார்.

விஜயின் கடைசி படம் இது தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, அவருடைய கடைசி படமான இந்த படம் கண்டிப்பாக அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் அவரது தோற்றமும், உரையாடல்களும் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மையப்படுத்திய கதையை உணர்த்துகின்றன.

‘ஜனநாயகன்’ டீசர், வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. பொங்கல் 2026-ஐ முன்னிட்டு திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு, விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கியதோடு, அவரது அடுத்தகட்ட அரசியல் மற்றும் திரைப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு பொது நலப் பணிகளை மேற்கொண்டனர். சென்னை ஆர்.கே. நகரில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.