"விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை"- அகமதாபாத் காவல் துறை அதிகாரி!
Author
bala
Date Published

அகமதாபாத் :அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தியிருந்தது.
மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்…எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதற்கான எந்த விவரமும் வெளியாகவில்லை.
ஆனால் தகவல்களாக மட்டும் பரவி வருகிறது. அப்படி ஏற்கனவே முதற்கட்டமாக விபத்தில் 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியானது. அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக தற்போதுவரை 170 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படியான பதற்றமான சூழலில், தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, யாராவது உயிர் பிழைத்தார்களா என்று சொல்வது கடினம் என அகமதாபாத் காவல் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அகமதாபாத் காவல் துறை அதிகாரி ஞானேந்திர சிங் மாலிக் பேசும்போது " விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது சூழ்நிலையை வைத்து பார்க்கையில் யாராவது உயிர் பிழைத்தார்களா என்று சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால்,இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகள் இல்லை" என தெரிவித்துள்ளார்.