Payload Logo
உலகம்

அமெரிக்க ராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் இராணுவத் தலைவருக்கு அழைப்பு.?

Author

gowtham

Date Published

Pakistan army chief Asim Munir

வாஷிங்டன் :அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைமை தளபதிகள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சி, வரும் 14-ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட.

பாகிஸ்தானின் சீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வி என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெறும் அமெரிக்க இராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனது வருகையை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்காவின் உறவு மேம்பாட்டிற்கான தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது. முனீர் இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக உயர்மட்ட இராணுவ ஈடுபாட்டை பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் போன்ற சூழ்நிலையைச் சந்தித்திருப்பதால், பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் அமெரிக்க பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனிக்கும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அமெரிக்கா தான் பேச்சுவாரத்தை நடத்தி சமரசம் செய்ததாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார், ஆனால் அதனை மத்திய அமைச்சகம் உறுதியாக நிராகரித்துவிட்டது.

முனீர் இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு பயணம் செய்தார், அப்போது அவர் ஜோ பைடனின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், துணை வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் பிக்வென் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோரை சந்தித்தார்.