விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!
Author
bala
Date Published

லீட்ஸ் :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு காரணமாக இடம்பெறவில்லை. இதனால், இளம் வீரர்களைக் கொண்ட அணியை வழிநடத்தும் கேப்டன் சுப்மன் கில் மீது பலத்த எதிர்பார்ப்பும், அதே நேரம் விமர்சனங்களும் எழுந்தன.
ஆனால், முதல் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கேப்டன் கில்லின் தலைமையில் விமர்சனங்களுக்கு செயலால் பதிலடி கொடுத்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கணித்திருந்தனர். ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் முதல் நாளில் நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.
ஜெய்ஸ்வால், இங்கிலாந்து மண்ணில் தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து, விஜய் மஞ்ச்ரேக்கர், சௌரவ் கங்குலி ஆகியோரின் வரிசையில் இடம்பெற்று சாதனை படைத்தார். 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது என்றும் சொல்லலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101, கேஎல் ராகுல் 42 ரன் எடுத்திருந்தனர்.
கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சுப்மன் கில், தனது பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடி அவரும் சதம் விளாசினார். வெளிநாட்டு மைதானங்களில் இதுவரை பெரிய ரன்கள் குவிக்காத கில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு, தனது திறமையை நிரூபித்தார். முன்னதாக, “கில் பிளேயிங் லெவனில் இருக்கவே தகுதியற்றவர்” என விமர்சித்த முன்னாள் வீரர்களுக்கு, அவரது ஆட்டம் கண்ணதாசனின் கவிதை போல பதிலடியாக அமைந்தது.
மேலும், கேப்டனாக மைதானத்தில் அவர் காட்டிய நிதானமும், இளம் வீரர்களை வழிநடத்திய விதமும் பாராட்டுகளைப் பெற்றது. தற்போது முதல் நாள் ஆட்டம் நேற்று முடிவடைந்த நிலையில் கில் 127 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருடன் பண்ட் 65 * ரன்களில் களத்தில் இருக்கிறார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்திருக்கிறது.
மேலும், இந்திய அணியின் இந்த சிறப்பான தொடக்கம், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இளம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என கணித்துள்ளார். 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்தில் வென்றதைப் போல, இந்த இளம் அணியும் வரலாறு படைக்குமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்.