"வேண்டான்னு சொன்னா கேளு"...வாள் கொடுத்த தொண்டர்..கடுப்பான கமல்ஹாசன்!
Author
bala
Date Published

சென்னை :ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியின் சார்பாக இன்று சென்னையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
எம்பியான அவருக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு சில பரிசுகளையும் அன்பாக கொடுத்தனர். ஒரு ரசிகர் கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பரிசாக கொடுத்தார். அதற்கு மகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மற்றொருவர் கையில் பெரிய தங்க நிறம் கொண்ட வாள் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை பார்த்தவுடனே சற்று கமல் முகம் மாறிவிட்டது. பிறகு வாள் கொடுத்த அந்த நபர் கையில் கமல்ஹாசன் அந்த வாளை வாங்கிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவேண்டும் என்பது போல கோரிக்கை வைத்தார். இதனால் கடுப்பான கமல்ஹாசன் முதலில் வாள் ஏதும் வேண்டாம் பா என்பது போல கூறினார்.
ஆனால், அந்த நபர் விடாமல் வாளை பிடிங்க பிடிங்க என கூறினார். ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்பான கமல்ஹாசன் கீழே வையுங்கள் என கடும் கோபத்துடன் கூறினார். கமல்ஹாசன் கூறியதை பார்த்தவுடன் அந்த நபரும் வாளை கீழே வைத்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.